top of page

அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ‘ஜிஐசி’ முன்னாள் தலைவர் அறிவிப்பு


திரு இங் கோக் சொங் தாம் மணந்துகொள்ளவிருக்கும் சிபில் லாவுடன் தேர்தல் துறைக்குச் சென்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’இன் முன்னாள் தலைவர் இங் கோக் சொங், 75, தமக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் தேர்தல் துறைக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக அவர் தேர்தல் துறைக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.


சிங்கப்பூரர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கவும், சிங்கப்பூரின் நிதி இருப்புகளை மேம்படுத்தும் பணிகளில் தாம் சம்பந்தப்பட்டிருப்பதும், தாம் தற்சார்புடையவர் என்பதுமே அந்த மூன்று காரணங்கள் என்றார் திரு இங்.


நிதி இருப்பைப் பாதுகாக்கவேண்டிய முக்கியப் பொறுப்பு அதிபருக்கு உள்ளது என்று குறிப்பிட்ட திரு இங், 45 ஆண்டுகள் அரசாங்கச் சேவையில் பணிபுரிந்த காலத்தில், சிங்கப்பூரின் சொத்துகளை மேம்படுத்த தாம் உதவியிருப்பதாகவும் சொன்னார். அவர் முதலில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் பணியாற்றினார். பின்னர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தில் சேர்ந்துகொண்டார்.

திரு இங் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தில் 27 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2013ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


அவர் தற்போது ‘அவாண்டா இன்வெஸ்ட்மண்ட் மேனேஜ்மண்ட்’ முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கிறார்.


2015ஆம் ஆண்டில் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் சக ஊழியர்களுடன் இணைந்து அவர் அந்நிறுவனத்தைத் தோற்றுவித்தார்.


அரசாங்கத்துடன் தமக்குக் குறைவான தொடர்புகள் உள்ளதை அவர் வலியுறுத்தினார். அரசாங்க அமைப்புகளின் நேர்மையைக் கட்டிக்காக்க அதிபரானவர் எந்தவோர் அரசியல் கட்சியையும் சார்ந்திருக்கக்கூடாது என்றார் அவர்.


அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் சில மாதங்களாகவே யோசித்துவந்ததாகத் திரு இங் கூறினார். அண்மைய நாள்களில் அரசியல் பதவி வகிப்பவர்களின் தொடர்பில் எழுந்துள்ள எதிர்மறையான செய்திகள், தாம் முடிவெடிப்பதற்கு உதவியாக இருந்ததாய் அவர் சொன்னார்.


“இத்தகைய நேரத்தில் நல்லவர்கள் முன்வந்து நாட்டுக்குச் சேவையாற்றுவது மிக முக்கியம் என்பதை நான் உணர்கிறேன். காரணம், சிங்கப்பூரின் எதிர்காலம் நாட்டுக்குச் சேவையாற்ற முன்வரும் நல்லவர்களை மிகப் பெரிய அளவில் சார்ந்துள்ளது”, என்று திரு இங் கூறினார்.


திரு இங் தனியார் துறைப் பின்னணியின் அடிப்படையில் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தகுதிபெறுவாரா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. அவர் குறைந்தது மூவாண்டுகளுக்கு ஒரு நிறுவனத்தின் ஆக மூத்த நிர்வாகியாகவோ தலைமை நிர்வாகியாகவோ இருந்திருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அவரின் நிறுவனம் சராசரியாகக் குறைந்தது $500 மில்லியன் மதிப்பிலான பங்­கு­தா­ரர்­க­ளின் பங்­கு­க­ளைக் கொண்டிருக்க வேண்டும்.


திரு இங் அவரது நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தாலும், அவர்தான் ஆக மூத்த நிர்வாகியா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.


மேலும், $500 மில்லியன் மதிப்பிலான பங்­கு­தா­ரர்­க­ளின் பங்­கு­க­ளைக் கொண்டிருக்கவேண்டும் என்ற தகுதிநிலையையும் அவாண்டா நிறுவனம் பூர்த்திசெய்யவில்லை.


இந்நிலையில், அவாண்டா நிறுவனத்தில் உள்ள அனுபவத்தைக் கொண்டு தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று திரு இங் கூறினார்.


பொதுச் சேவையில் தமக்குள்ள அனுபவத்தைக் கொண்டு தாம் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


bottom of page